search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதி நீக்கம்"

    • பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார்.
    • குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது.

    திருவேற்காடு:

    சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. அதில் 10-வது வார்டு கவுன்சிலராக நளினி குருநாதன் இருந்தார்.

    இந்தநிலையில் பெண் கவுன்சிலர் நளினி குருநாதனை, கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து திருவேற்காடு நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவிட்டார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மீறியதால், சட்ட மீறல்கள் சட்டப்பிரிவு 32-ன் கீழ் கவுன்சிலர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக நகராட்சி கமிஷனர் குறிப்பிட்டு இருந்தார்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணைகள் சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார். கவுன்சிலரின் குடும்பத்தினரே டெண்டர் எடுப்பது விதிமீறல் ஆகும். மேலும் வேட்பு மனு தாக்கலின் போது உறுதிமொழி பத்திரத்தில் தான் கூலி வேலை செய்து வருவதாக குருநாதன் போலியான தகவலை குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் அவர், கடந்த ஆண்டு தனது வார்டில் எந்தவித பணிகளையும் செய்யவில்லை எனக்கூறி வார்டில் உள்ள பெண்களை அழைத்து வந்து நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி நகராட்சி கமிஷனர் அறையில் அமர்ந்து அவதூறாக பேசியதாகவும் புகார்கள் வந்தது.

    தொடர்ந்து குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த விளக்கம் உண்மையானதாக இல்லை என்பதாலும் பெண் கவுன்சிலர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் மற்றும் கடிதம் வருவதை அறிந்த நளினி குருநாதன், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக நகர மன்ற தலைவர் மூர்த்தியிடம் ராஜினாமா கடிதத்தை நேற்று கொடுத்தார்.

    கவுன்சிலர் நளினி பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து திருவேற்காடு நகராட்சி இணையதளத்தில் உள்ள கவுன்சிலர்கள் பட்டியலில் இருந்து அவரது புகைப்படம் மற்றும் பதவி உடனடியாக நீக்கப்பட்டது. 10-வது வார்டு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • ராமநாதபுரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம்

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்த பா.ஜ.க. அரசை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில துணைத்தலைவர் நவாஸ்கனி எம்.பி., தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் வருசைமுகம்மது வரவேற்றார். மதசார்பாற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசினார்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கரு.மாணிக்கம், சி.பி.எம். மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை, சி.பி.ஐ மாவட்ட செயலாளர் என்.எஸ்.பெருமாள், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.பேட்ரிக், ஆதிதமிழர் பேரவை மாவட்ட நிர்வாகி புவனேஷ், பெரியார் பேரவை நிர்வாகி நாகேஷ்வரன், நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவர் டி.ஆர்.பிரவின்தங்கம், மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ரமேஸ்பாபு, தெய்வேந்திரன், ராஜாராம் பாண்டியன், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் என்.ராமலட்சுமி, சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.கலையரசன், ஆர்.குருவேல், எம்.ராஜ்குமார், கண்ணகி, தாலுகா செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்களவை செயலகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    • லட்சத்தீவு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது

    புதுடெல்லி:

    கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலை மக்களவை செயலகம் கடந்த ஜனவரி மாதம் தகுதி நீக்கம் செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து முகமது பைசல் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கீழ்கோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து  ஜனவரி 25ம் தேதி உத்தரவிட்டது. இதனால் லட்சத்தீவு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது.

    இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட லட்சத்தீவு எம்பி. முகமது பைசல் மக்களவை செயலகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டு மற்றும் 10 ஆண்டு சிறைத்தண்டனைக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தபிறகும், தகுதி நீக்கம் செய்யும் அறிவிப்பை மக்களவை செயலகம் திரும்பப் பெறவில்லை என முகமது பைசல் தனது மனுவில் கூறி உள்ளார்.

    தகுதி நீக்கம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்யாததால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் நடப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • தனித்தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.
    • ராஜாவின் தாத்தா நெல்லையை சேர்ந்தவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட தேவிகுளம் சட்டமன்ற தொகுதி தனித்தொகுதியாகும். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராஜா போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

    இந்த தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குமார், தேர்தலை ரத்து செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில் அவர், 'தனித்தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ராஜா போலி ஆவணங்களை தாக்கல் செய்து கடந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளார். எனவே அந்த தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    அந்த மனுவை கேரள ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்று கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலை ரத்து செய்து நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராஜா எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்கும் போது தமிழில் பதவிப் பிரமாணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜாவின் தாத்தா நெல்லையை சேர்ந்தவர். அவர் 1951-ம் ஆண்டு கேரளாவுக்கு குடும்பத்துடன் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கண்காணிப்பு குழு கூட்டத்தில் தகவல்
    • குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 282 ரேசன் கார்டுகள் உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு விஜய் வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், பிரின்ஸ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட்தாஸ், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் 35 கிலோ அரிசி ரேசன் கார்டுகள் தகுதி இழப்பு செய்யப்பட்டு தற்பொழுது அவர்களுக்கு குறைவான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தகுதியான நபர்களுக்கும் அரசி வழங்குவது நிறுத் தப்பட்டுள்ளது. எந்த அடிப்ப டையில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ரேசன் கார்டுகள் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளது.

    இறச்சகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற முறையில் அரிசி வழங்கப்படுகிறது. பழுதான ரேசன் கடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரல்வாய் மொழி சுபாஷ் நகர் பகுதியில் பாலம் அமைக்க ரெயில்வே அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொண்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    அடுத்த கூட்டத்தில் ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். துவரங்காடு-தடிக்கா ரன்கோணம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீரிப்பா றை பாலப்பணியை விரை வில் தொடங்க வேண்டும் என்றார்.

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறுகையில், களியக்கா விளை காவல்கிணறு சாலை சீரமைப்பு பணியை முறையாக நடத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாலை பணி மற்றும் பாலப்பணியை முறையாக செய்யாத காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மழை நேரங்களில் சாலை பணியை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். வேளான்துறை திட்டங்கள் குறித்து பயனாளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது என்பது குறித்து விவசாயிகள் தெரிந்து கொண்டால் மட்டுமே அதன் மூலம் அவர்கள் பயன் பெற முடியும் என்றார்.

    அதிகாரிகள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 282 ரேசன் கார்டுகள் உள்ளது. 62,266 ரேசன் கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது சுமார் 14 ஆயிரத்து 562 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு புதிதாக நபர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து அதிகாரி கள் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகி றார்கள். காவல் கிணறு-பார்வதிபுரம் சாலை மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் ஒப்ப டைக்கப்பட்டு உள்ளது. பார்வதி புரம்- களியக்கா விளை சாலை வேலைகள் நடந்து வருகிறது. அது தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் உள் ளது. நான்கு வழி சாலைக்கு இடங்களை கையகப்ப டுத்தியதற்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு சில இடங்களில் வழக்குகள் நடந்து வருகிறது என்றனர்.

    • முறைகேடு நடந்துள்ளதாக புகார்
    • அதிகாரிகள் நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இது துணைப் பதிவாளர் (பால்வளம்) வேலூர் சரக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

    இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தலைவர் கோபு, துணைத் தலைவர் கார்த்தி, மன்னன், கணபத கணபதி, காயத்ரி, ரேணுகா, மீனா, ரங்கசாமி, ஆறுமுகம், வரதராஜி, சின்னப்பிள்ளை ஆகிய 9 பேர் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் சங்க நிர்வாகிகள் சங்கத்திற்கு முரண்பாடாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில், சங்கத் துணை விதிக்கு முரணாக சங்க நிர்வாக குழு செயல்பட்டு மேற்படி முறைகேடுகளுக்கு காரணமான சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் வேலூர் துணைப் பதிவாளர்களுக்கு (பால்வளம்) அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

    வேலூர் துணைப்பதிவாளர் தலைவர் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டு விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது சங்கத் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சங்கத்தில் கடமை மற்றும் பொறுப்புகள் சரிவர தெரியாததால் மேற்படி நிதி இழப்பு ஏற்பட நாங்கள் காரணமாகி விட்டதாக தாங்களே ஒப்புக்கொண்டனர்.

    இதனை அடுத்து தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பாக சங்கத்திற்கு நிதியிழப்பு ஏற்படுத்தி கடமை மற்றும் பொறுப்புகளை முறையாக செய்ய தவறியதால் சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழு 9 உறுப்பினர்கள் உள்பட அனைவரையும் நிரந்தர தகுதி நீக்கம் செய்து கூடுதல் பால் ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஜெ. ராஜராஜன் உத்தரவிட்டார்.

    இதனால் காவேரிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 9 நிர்வாகிகள் நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எ.ஏ.க்கைளை தகுதி நீக்கம் செய்ய கோரும் மேல் முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #OPS #MLADisqualify
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தது. சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்தார்.

    சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரதுஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பி.எஸ். அணி இணைந்தது.

    இதற்கிடையே ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அவர் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டார்.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சபா நாயகர் முடிவில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

    இதை தொடர்ந்து தி.மு.க. சார்பில் சக்கரபாணி, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

    இதன் மீதான விசாரணை ஏற்கனவே நடைபெற்றது. இறுதி விசாரணைக்காக இந்த வழக்கு காத்திருக்கிறது. இறுதி விசாரணை முடிந்தால் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்.



    இந்த நிலையில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எ.ஏ.க்கைளை தகுதி நீக்கம் செய்ய கோரும் மேல் முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி தி.மு.க., டி.டி.வி. தினகரன் தரப்பில் முறையிடப்பட்டது.

    ஆனால் விரைவாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விரைவாக விசாரிக்க முடியாது. வழக்கை பட்டியலிட முயற்சி செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கின் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. #SupremeCourt #OPS #MLADisqualify
    ×